டெல்லி :கரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக் கூறுகளும் கண்டறியப்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிய வந்து இருப்பதாகவும், தனி நபரின் வாழ்க்கை முறை மற்றும் அதிகப்படியான குடிப்பழக்கம் ஒரு காரணியாக இருக்கலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.
இந்திய சுகாதாரத்துறை வழிகாட்டி என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முழுமையான அணுகுமுறையின் காரணமாக பொது மக்கள் நியாயமான மற்றும் மலிவு விலையான மருத்துவ வசதிகளை பெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் சீரான முயற்சியின் காரணமாக ஏறத்தாழ 150 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும், அதனால் அந்த நாடுகளில் இந்தியா மீது நல்லெண்ணத்தை உருவாக்கியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கரோனா தடுப்பூசிகள் குறித்து தவறான எண்ணங்களை உருவாக்க சிலர் முயன்றதாக அமைச்சர் கூறினார்.
யாருக்காவது பக்கவாதம் அல்லது கடுமையான உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதற்கு கரோனா தடுப்பூசி காரணம் எனக் கருதுகின்றனர். இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய விரிவான ஆய்வில் மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு கரோனா தடுப்பூசி காரணமாகாது என தெரியவந்து உள்ளது என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.