திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சோழர் காலத்தில் கட்டப்பட்ட முருகன் கோயில் சுரங்கப்பாதை இருந்ததை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
திருவள்ளூரை அடுத்த பட்டறைைபெருமந்தூர் ஊராட்சியில் உள்ள கோயிலானது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கோயிலை இடிக்கக்கூடாது என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

தொல்லியல் ஆய்வு: இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் துறை ஆய்வாளர் லோகநாதன் தலைமையில் தொல்லியல் அதிகாரிகள் இந்த கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முருகன் கற்சிலை அமைந்துள்ள கோயிலின் மண்டபத்திற்குள் சுரங்கப்பாதை இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். பட்டறைைபெருமந்தூர் பகுதியில் ஏற்கனவே 3 கட்டமாக தொல்லியல் அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 1000 மேற்பட்ட ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக அப்பகுதியில் சங்க காலத்தில் செங்கற்கலால் கட்டப்பட்ட கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "ரூ.40 லட்சம் காருக்கு 20 ஆயிரம் தர மாட்டாரா?"...மோட்டார் வாகன ஆய்வாளர் பேசிய ஆடியோ வைரல்!
ஈடிவி பாரத்திடம் பேசிய அந்த பகுதியை சேர்ந்த பலராமன், "கோயில் கருவறையின் உள்ளே சுரங்கபாதை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இறங்கி பார்த்ததில் அது ஏழடி ஆழத்தில் இருப்பது தெரியவந்தது. மேற்கொண்டு இருட்டாக இருந்ததால் அதில் சென்று பார்க்க இயலவில்லை. இந்த சுரங்கபாதை திருவலங்காடு வரை செல்லலாம் என்று தெரிகிறது,"என்றார்.
கோயிலை பாதுகாக்க வேண்டும்: மேலும், ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், "தொல்லியல் சிறப்பு வாய்ந்த முருகன் கோயிலை எக்காரணத்தைக் கொண்டும் இடிக்கக் கூடாது. கோயிலை தவிர்த்து மாற்றுப்பாதையில் நெடுஞ்சாலை அமைக்க வேண்டும். தொல்லியல் தன்மை மாறாமல் கோயிலை அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயிலில் உள்ள சுரங்க பாதையை முழுவதுமாக பாதுகாத்து அந்த பாதை எங்கே செல்கிறது என்றும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி தகவல்களுடன் இப்போதைய புதிய கண்டுபிடிப்புகள் குறித்து ஒப்பீடு மேற்கொள்ள வேண்டும். கோயிலை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,"என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.