சென்னை: 60 ஆண்டுகளாக தமிழ் தமிழ் என்று பேசுகிறார்களே தவிர, தமிழருக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எந்த சேவையையும் செய்யவில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை 23 தொகுப்புகளாக வெளியிட்ட எழுத்தாளர் சீனி விஸ்வநாதனுக்கு, இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்து கெளரவித்துள்ளது. இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 18) சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில், வானவில் பண்பாட்டு மையம் சார்பில், எழுத்தாளர் சீனி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பாரதியாரின் வேலைப்பாடுகள் அனைத்தும் காலம் கடந்து பேசக்கூடியவை. ராஜ்பவனில் பல சிலைகள் இருந்தாலும், பாரதியார் சிலை இல்லை. பாரதியார் குறித்த எனது அறிவு என்பது குறைவு. கடந்த 2 நூற்றாண்டுகளாக தமிழ் மொழியில் சிறந்தவர்கள் யாராக இருந்தாலும், பாரதியாருக்கு நிகரான ஒருவர் இல்லை.
ஆளுநர் ரவி அவர்கள், இந்திய சுதந்திரத்துக்காகவும், தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரத்தை வளப்படுத்தவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பாரதத்தாயின் தவப்புதல்வரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை 23 தொகுப்புகளாக ஆராய்ந்து, நீடித்த ஆய்வு மேற்கொண்டதற்காக… pic.twitter.com/qivaqCFjiK
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) February 18, 2025
தமிழகத்தில் உள்ள அனைவரும் பாரதியாரை தோளில் சுமக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாரதியாரின் பெயரில் பல்கலைக்கழகங்கள் இருந்தும், ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை. அழுத்தம் காரணமாகவே பல்கலைக்கழகங்களில் பாரதியாருக்கான இருக்கை அமைக்காமல் இருக்கிறார்கள். துணைவேந்தர்கள் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள், இந்த நிலை மாறும்.
60 ஆண்டுகளாக தமிழ் தமிழ் என்று பேசுகிறார்களே தவிர, தமிழருக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எந்த சேவையையும் செய்யவில்லை. தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் பாரதியாரை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாரதி மன்றங்களை அமைத்து பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.