சென்னை:உளுந்து களி அல்லது உளுந்தங்களி, இது நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கொழுப்பு, வைட்டமின் B போன்ற சத்துக்களை அள்ளி தருகின்றன. குறிப்பாக, பெண்கள் மாதவிடாயின் போது அதிக நன்மைகளை தந்து உடலை வலிமைபடுத்துகிறது. அப்படியான உளுந்தங்களி-யை எப்படி தயார் செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
- ஒரு கப் கருப்பு உளுந்து
- 1/4 கப் அரிசி
- 1.5 கப் கருப்பட்டி அல்லது நாட்டுச் சக்கரை
- 3 ஏலக்காய்
- 3 கப் தண்ணீர்
- 1 கப் நல்லெண்ணெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கருப்பு உளுந்து மற்றும் கால் கப் அரிசியை ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் முழுமையாக வடிந்தவுடன் அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டையும் கைவிடாமல் வறுத்து வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்து கொள்ளுங்கள்.
நன்றாக சூடு ஆறிய பின்னர், உளுந்து மற்றும் அரிசியுடன் 2 அல்லது 3 ஏலக்காய்யை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அறைத்து கொள்ளுங்கள். (குறிப்பு: மிக்ஸி ஜார் ஈரமாக இருக்கக்கூடாது). அறைத்த பொடியை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வைத்து 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளுங்கள். (தீ இல்லாமல் கலப்பதால் கட்டிகள் தவிர்க்கலாம்).
கட்டிகள் இல்லாமல் கரைத்த கலவையை முதல் ஒரு நிமிடம் அதிக தீயில் வைத்து நன்றாக கலந்து விடவும். அதன் பின்னர், கம்மியான தீயில் வைத்து கைவிடாமல் கலந்து விடவும். தண்ணீர் வற்றி நன்றாக கட்டியாக மாறும் போது கருப்பட்டி அல்லது நாட்டு சக்கரையை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
கருப்பட்டி அல்லது நாட்டு சக்கரை சேர்க்கும் பொழுது களி தண்ணியான பதத்திற்கு வரும். பின்னர், கட்டியான பதத்திற்கு களி வரும் வரை கலந்து விட்டு இறுதியாக 1 கப் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அதனை தொடர்ந்து களி அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கினால் சுவையான சத்தான உளுந்தங்களி ரெடி.
இனி bechelors-யும் செய்யலாம் உளுந்து களி:அரிசி மற்றும் உளுந்தை வீட்டிலேயே அரைத்து பொடியாக எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், தேவைப்படும் போது ஒரு கடாயில் கருப்பட்டியை போட்டு நன்றாக உருகியவுடன் அதில் மேல் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்துக்கொள்ளுங்கள். (குறிப்பு: கருப்பட்டி மீது பொடியின் துகள்கள் தெரியும் வரை பொடியை சேர்க்கவும்).
பின்னர், நன்றாக கலந்து விட்டு அல்வா பதத்திற்கு வந்தவுடன் எடுத்துக்கொள்ளுங்கள். நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி வாரத்திற்கு ஒரு முறை காலையில் சாப்பிட்டு இடுப்பு வலிக்கு டாடா சொல்லுங்கள்.
இதையும் படிங்க: ஒல்லியா இருக்கோம்னு கவலை வேண்டாம்.. உடல் எடையை அதிகரிக்க அசத்தலான ஃபுட் டிப்ஸ் இதோ..! - TIPS TO GAIN WEIGHT