எப்போதும் வழக்கமான அரிசி மாவு தோசை சாப்பிட்டு சலித்து விட்டதா? ஒரு முறை பச்சைப்பயறை பயன்படுத்தி ஆந்திரா ஸ்டைலில் தோசை மாவு அரைத்து சாப்பிட்டு பாருங்கள். ருசிக்கு ருசி..ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம் என நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து ஆரோக்கியமாக வாழலாம். எளிமையாக பச்சைப்பயறு தோசை எப்படி செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சைப்பயறு - 1 கப்
- பச்சரிசி/இட்லி அரிசி/புழுங்கல் அரிசி - 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - 3 கப்
பச்சைப்பயறு தோசை செய்முறை:
- முதலில், ஒரு பாத்திரத்தில் பச்சைப்பயறு மற்றும் அரிசி சேர்த்து தண்ணீரில் நன்கு கழுவி எடுத்துக்கொள்ளுங்கள்.
- பின்னர், இதில் 3 கப் தண்ணீர் சேர்த்து 8 மணி நேரத்திற்கு ஊற வைத்து விடுங்கள். இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன் ஊற வைத்து, காலையில் அரைப்பது சிறந்தது.
- காலையில், நாம் ஊற வைத்த பயறை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும். அதனுடன், சீரகம், நறுக்கி வைத்த இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்க்கவும்.
- இப்போது, நாம் பயறு ஊறவைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக இந்த கலவையில் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு நைசாக அரைக்கவும்.
- அடுத்ததாக, அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும், இந்த மாவை மெல்லியதாக ஊற்றி ஒரு புறம் நன்கு வேகவைக்கவும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, காய்கறிகள், இட்லி பொடி என சேர்த்து எடுத்தால் சத்தான தோசை ரெடி.
இதையும் படிங்க: தோசை, சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும் 'ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் பச்சடி'..இப்படி செய்து பாருங்க!
பச்சைப்பயறு நன்மைகள்:
- பச்சைப்பயறை வாரத்திற்கு இருமுறை எடுத்துக்கொள்வதால், 40 வயதிற்கு மேல் ஏற்படும் வைட்டமின் குறைபாடுகள் தடுக்கப்படும்.
- இந்த பயறில் அதிக புரதச்சத்து இருப்பதால், குழந்தைகளுக்கு வாரம் மூன்று முறை கொடுத்து வரும் போது அவர்களின் எலும்பு மற்றும் நரம்பு மண்டலம் வலுப்பெறும். கூடுதலாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, ஈ, சி, ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்களால் பச்சைபயறு நிரம்பியுள்ளது. இதனை அடிக்கடி உட்கொள்வதால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகை முற்றிலுமாக குணமாகும்.
- இப்பயறில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்குவதையும், உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், பச்சைப்பயறை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- பச்சைப்பயறில் உள்ள நார்ச்சத்து மற்றும் தாதுச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள், பச்சைப்பயறை உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க பச்சைப்பயறு உதவியாக இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்