நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள், அதன் கிருமி நாசினி பண்பிற்காக இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், தற்போது சந்தைகளில் விற்கப்படும் மஞ்சள் தூள் மற்றும் விரலி மஞ்சள் கிழங்கில் ’லெட் குரோமேட்’ ரசாயனம் கலக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஞ்சளின் ஆரோக்கிய நன்மைக்காக அனைவரும் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில் இந்த செய்தி மக்களை அச்சத்தில ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சுத்தமான மஞ்சள் கிழங்கு வாங்கி எப்படி வீட்டிலேயே மஞ்சள் தூள் அரைப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்..
மஞ்சள் தூள் அரைப்பது எப்படி?:
- கடையில் இருந்து வாங்கி வந்த விரலி மஞ்சள் கிழங்குகளை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் உள்ள குச்சி, தூசி போன்றவற்றை நீக்கி கொள்ளுங்கள்.
- பின்னர், மஞ்சள் கிழங்கு மூழ்கிற அளவிற்கு தண்ணீர் ஊற்றி, கிழங்கை சுற்றியுள்ள மஞ்சள் தூளை கழுவி, வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
- இப்போது, தாம்பூலம் அல்லது ஒரு துணியில், நாம் கழுவி வைத்த மஞ்சள் கிழங்குகளை பரப்பி வெயிலில் காயவைக்கவும். வெயில் இல்லையென்றால், ஃபேனிற்கு கீழ் இரண்டு நாட்களுக்கு வைக்கவும்.
- கிழங்குகள் நன்கு காய்ந்ததும், மாவு மில்லில் கொடுத்து அரைக்கவும். சிறிய அளவில் இருந்தால் மிக்ஸி ஜாரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நைசாக அரைக்கவும்.
- இப்போது, நாம் அரைத்து வைத்துள்ள மஞ்சளை சல்லடையில் சலித்து காயவைக்கவும். மஞ்சள் தூள் நன்கு காய்ந்த பின்னர், காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் மணமணக்கும் மஞ்சள் தூள் தயார்.