சென்னை: பல்கலைக் கழக மானியக்குழுவின் வரைவு அறிக்கையை திரும்ப பெற கோரியும், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் குண்டுக்கடாக கைது செய்தனர்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அரவிந்தசாமி தலைமையில் சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது பல்கலைக் கழக மானியக்குழுவின் வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கல்விக்கு அளிக்க வேண்டிய நிதியை வழங்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் அரவிந்தசாமி, "மத்திய அரசு யுஜிசி வரைவு நெறிமுறைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக உள்ளது. பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களாக கார்ப்பரேட் கம்பெனியில் பணிபுரிந்தவர்கள் நியமிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 8 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசுக்கு எந்த ஒரு பங்கும் இல்லாமல் கல்வியை காவிமயப்படுத்துவதும் கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பதையும் கண்டிக்கிறோம். மத்திய அரசு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது. மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் மத்திய அரசு நிதி தரும் என்று அரசியல் அமைப்பு சட்டம் சொல்லவில்லை. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை வன்மையாக கண்டிக்கிறோம். பாஜக அரசு மாணவர்களை வஞ்சிக்காமல் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும். ஆளுங்கட்சியுடன் இணைந்து மாணவர் சங்கங்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்த உள்ளோம்" என்றார்.
