டெல்லி: சி.பி.எஸ்.இ, அதாவது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், வினாத்தாள்கள் கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்படுகிறது. இதனை மறுத்துள்ள சி.பி.எஸ்.இ நிர்வாகம், போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேர்வுகள் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், கூடுதல் விவரங்களை cbse.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் சில போலி தகவல்கள் பரவி வருவதை குறிப்பிட்டுள்ள சி.பி.எஸ்.இ அறிக்கையில், "தேர்வு நேரத்தில் சில யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வினாத்தாள் கசிவு தொடர்பான வதந்திகளைப் பரப்புவதைக் கடந்த சில நாட்களில் கவனிக்க முடிந்தது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதுபோன்ற வினாத்தாள்களில் உள்ள கேள்விகள் தங்களிடம் இருப்பதாகக் கூறி போலி இணைப்புகளும் அனுப்பப்படுகின்றது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போலி கணக்குகளுக்கு பணம் செலுத்தினால், வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் என மோசடி நபர்கள் வலைவிரித்து வருவதாக சி.பி.எஸ்.இ தங்கள் அறிக்கையில் எச்சரித்துள்ளது.
இதனால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பதற்றமடைவதாகத் தெரிவித்திருக்கும் வாரியம், தவறான தகவல்களை பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளது. எனவே, மாணவர்களோ, பெற்றோர்களோ அல்லது பள்ளி நிர்வாகமோ போலித் தகவல்களை நம்பாமல், சி.பி.எஸ்.இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Exclusive: ‘மதிப்பெண் மட்டுமே உங்கள் வாழ்க்கையை மதிப்பீடு செய்யாது’ - அன்பில் மகேஸ் பொய்யாமொழி |
தேர்வு சமயங்களில் பொதுமக்கள் போலி செய்திகள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கும்படி அறிக்கை வலியுறுத்தியுள்ளது. தேர்வு நடைமுறைகளில் தொய்வு ஏற்படுத்தும் நோக்கில், தவறான செய்தி பரப்புவோர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சி.பி.எஸ்.இ எச்சரித்துள்ளது.
சி.பி.எஸ்.இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணையின்படி குறிப்பிட்ட தேதிகளில் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 8,000 பள்ளிகளைச் சேர்ந்த 44 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,842 தேர்வு மையங்களில் இந்த தேர்வை எழுதுகின்றனர்.