கண்ணில் ஏற்படும் பாதிப்பான கண்புரை நோய், பெரியவர்களுக்கு ஏற்படுவதை போல பிறந்த குழந்தைகளுக்கும் ஏற்படும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகளை கண்புரை நோய் அதிகம் பாதிப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், 10 ஆயிரத்தில் 6 குழந்தைகளுக்கு பிறவிலேயே கண்புரை பாதிப்பு ஏற்படுவதாகவும், இதில் 10 சதவீத குழந்தைகளுக்கு பார்வை இழக்கும் அபாயம் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
கண்புரை நோய் என்றால்?: கண்புரை பாதிப்பு ஏற்பட்டால் பார்வை மங்கலாக, தெளிவில்லாமல் இருக்கும். உதாரணத்திற்கு, மூடுபனியின் போது கார் கண்ணாடியின் வழியாக வெளியே பார்க்க முயற்சிப்பதை கற்பனை செய்து பாருங்கள். கண்புரை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இப்படித்தான் பார்வை இருக்கும். கண்களில் உள்ள லென்ஸில் உள்ள புரதம் உடைந்து பார்வையை மங்கலாக்குகிறது. இதுவே, கண்புரை நோய்.
காரணம்?: குழந்தைகளுக்கு கண்புரை தொற்று ஏற்படுவதற்கு, கர்ப்ப காலத்தில் தாய்வழி நோய் தொற்று, மரபணு வளர்ச்சியில் முரண்பாடு போன்ற காரணங்களாக இருக்கலாம். மேலும், கண் சார்ந்த பிரச்சனை, வீக்கம், ஸ்டீராய்டு போன்றவற்றின் பயன்பாடும் கண்புரை தொற்றை ஏற்படுத்தும்.
ஆரம்ப கால அறிகுறிகள்:கண்புரை நோய் அறிகுறி பிறந்த மற்றும் வயதில் மூத்த குழந்தைகளுக்கு வெவ்வேறாக இருக்கலாம்.
- பிறந்த குழந்தைகள்: கருவிழியில் வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் புள்ளி போல் தென்படுவது. இது பொதுவாக, வெளிச்சம் மற்றும் புகைப்படத்தில் தெளிவாக தெரியும்.
- வெவ்வேறு திசைகளைப் பார்த்தபடி கருவிழிகள் இருப்பது.
- கைக்குழந்தைகள் முகங்களை அடையாளம் காண சிரமப்படுவது
- வெளிச்சத்தை பார்க்க முடியாமல், ஒளி கண்களில் அசெளகரியத்தை ஏற்படுத்துவது. இந்த அறிகுறிகளை நீங்கள் குழந்தையிடம் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.