ஹைதராபாத்:விலங்கு சுகாதார தடுப்பூசிகளை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணை நிறுவனமான பயோவெட் (Biovet), கறவை மாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கு ஏற்படும் தோல் கட்டி நோய்/ பெரியம்மை நோயினை (lumpy skin disease- LSD) தடுக்க தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. பயோலம்பிவேக்சின் (BIOLUMPIVAXIN) என பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியிற்கு மத்திய மருந்து தரநிலைகள் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) உரிமத்தை வழங்கியுள்ளது.
மூன்று ஆண்டுகளாக பல ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று பாரத் பயோடெக்கின் துணை நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகளுக்கு தோல் கட்டி நோய் பரவி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நோய் பாதிப்பால், குஜராத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல, கடந்த 2024ம் ஆண்டு, தமிழ்நாட்டில் பரவலாக குறிப்பாக கன்றுகளுக்கு இந்த பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அதன்படி, இந்த நோயினை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, CDSCO உரிமம் பெறுவது நமது நாட்டில் கால்நடைகள் மற்றும் சுகாதார மேம்பாட்டில் ஒரு முக்கியமான படியாகும் என்று பாரத் பயோடெக்கின் நிர்வாகத் தலைவரும் பயோவெட்டின் நிறுவனருமான டாக்டர் கிருஷ்ணா யெல்லா கூறியுள்ளார்.
மேலும், இந்த தடுப்பூசிக்கு இனி இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் கர்நாடகாவின் மல்லூரில் உள்ள அதன் பிரிவில் பயோவெட் ஆண்டுதோறும் 50 கோடி டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்று அவர் கூறினார்.