'வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்கு வரும்' என்பதே வெண்டைக்காய் பற்றிய முதல் அபிப்பிராயமாக பலருக்கும் இருக்கும். எத்தியோப்பியாவை பூர்விகமாக கொண்ட வெண்டைக்காய், அரேபியா, நைல்நதிக்கரை வழியாக இந்தியாவுக்குள் வந்து, இன்று தமிழகத்தில் அதிகம் விளையக்கூடிய காய்கறிகளில் ஒன்றாகிவிட்டது.
வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு வருகிறதோ இல்லையோ ஆனால், ஏராளமான சத்துக்களை வாரி வழங்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது. இதன் வழவழப்புத்தன்மைகாக பலருக்கும் பிடிக்காத ஒரு காயாகவும் இருக்கிறது. இதிலுள்ள கோந்துத்தன்மை மற்றும் பெக்டின் (Pectin) தான் வெண்டைக்காயின் வழவழப்பு தன்மைக்கு காரணம்.
குழம்பு, பொரியல், கூட்டு என வெண்டைக்காயை வகைவகையாக நாம் செய்து சாப்பிட்டாலும், தற்போது காலையில் ஊற வைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பது பிரபலமாகி வருகிறது. தினசரி காலை இந்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆய்வு சொல்வது என்ன? என்பதை பார்க்கலாம் வாங்க.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்: வெண்டைக்காயின் விதைகள் மற்றும் தோல் நீரிழிவு எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளதாக பார்மாகியுடிக்கல் பயாலஜி (Pharmaceutical Biology) தனது இதழில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. எனவே, சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதன் மூலம் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: வெண்டைக்காயில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த மிகவும் உதவியாகவும் இருக்கிறது. எனவே, 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் காலையில் வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதன் விளைவாக, சளி, காய்ச்சல் மற்றும் பிற தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
எலும்புகளை வலிமையாக்குகிறது: வெண்டைக்காயில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இது எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இடுப்பு எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள், இந்த தண்ணீர் குடித்து வரலாம். இதன் விளைவாக, எலும்புகள் வலுவடைந்து, எலும்பு தொடர்பான பிரச்சனை ஏற்படுவது குறையும்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெண்டைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து கெட்ட கொழுப்பின் அளவை (எல்டிஎல்) கணிசமாகக் குறைக்கிறது. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இதேபோல், வெண்டைக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தமனிகளில் பிளேக் உருவாகாமல் தடுக்க உதவுகிறது.