சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தி வரும் நிலையில் பிரபலங்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். தேர்தல் மற்றும் வாக்குச் செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் ஏராளமான பிரபலங்கள் சென்னையில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வரும் நிலையில் நடிகர் விஷாலும் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு நடிகர் விஷால் சைக்கிளில் சென்று வாக்களித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது நடிகர் விஜய் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்த நிலையில், அதே பாணியில் நடிகர் விஷால் இன்று வாக்கு செலுத்த வந்துள்ளார்.