சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’கோட்’ (The Greatest of al time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. ரூ.400 கோடிக்கு மேல் பிரமாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள 'கோட்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோட் திரைப்படம் முன்பதிவில் சாதனை படைத்துள்ளது.
பிரபல சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலக அளவில் முதல் நாளில் மொத்தமாக 5,522 காட்சிகளுக்கு 5,88,886 டிக்கெட்கள் 'கோட்' படத்திற்காக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விற்றுத் தீர்ந்துள்ளது. இதிலிருந்து 'கோட்' திரைப்படம் ரூ.15.66 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ் மொழியில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கோட் படத்திற்கு அதிக டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது.
இதன் மூலம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 முன்பதிவு வசூலான 11.20 கோடி என்ற சாதனையை கோட் திரைப்படம் முறியடித்துள்ளது. அதிகபட்சமாக, பெங்களூருவில் முதல் நாளில் 846 காட்சிகளுக்கு விற்பனையான டிக்கெட்களில் ரூ.3.15 கோடி வசூல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் 615 காட்சிகளுக்கு ரூ.3.15 கோடி வசூல் செய்துள்ளது.