சென்னை: கடந்த ஜூன் மாதம் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து அவரது 50வது திரைப்படமாக வெளியானது 'மகாராஜா'. இப்படத்தில் அபிராமி, முனிஷ்காந்த், நட்டி, சிங்கம் புலி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மகாராஜா திரையரங்குகளில் வெளியானது முதல் அனைவரது பாராட்டையும் பெற்றது.
ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவரும் மகாராஜா திரைப்படத்தையும், அப்படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களை பாராட்டினர். பெரிய நடிகர்களின் 50வது படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் ரீதியாக வெற்றியை பெறவில்லை. ஆனால் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
ஒரு பிரபலமான நடிகர் தனது 50வது படத்தில் இது போன்ற கதைகளை தேர்ந்தெடுக்க தயங்குவர். ஆனால் விஜய் சேதுபதி மகாராஜா போன்ற வித்தியாசமான கதையை தேர்வு செய்து அதிலும் வெற்றி பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி நடிகர் சிங்கம் புலியின் நடிப்பு இப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மகிழ்வித்து வந்த சிங்கம் புலி, இப்படத்தில் எவரும் எதிர்பாராத வகையில் முக்கியமான கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.