சென்னை: கிண்டி அண்னா பல்கலைக் கழக மாணவி கடந்த 23ஆம் தேதி பல்கலை வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் (37) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னையில் முக்கிய கல்வி நிறுவனமான அண்ணா பல்கலையிலேயே வெளிநபர் வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு இந்த வழக்கை விசாரணை செய்யும் எனவும் உத்தரவிட்டது.
அதிமுக சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றிய ஞானசேகரன் மாணவியுடன் இருந்தபோது, ''சார் ஒருவருடன் நீ இருக்க வேண்டும்'' என்று கூறியதாகவும், அந்த சார் யார் என்று கேள்வி எழுப்பி அதிமுகவினர் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
இதற்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், '' அண்ணனாகவும், அரணாகவும் எல்லா சூழ்நிலைகளிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்'' என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: "பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் நிற்பேன்" - தவெக விஜய் கைப்பட கடிதம்!
அதன் தொடர்ச்சியாக விஜய் இன்று (டிச.30) தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை நேரில் சந்தித்து இதுகுறித்து சில கோரிக்கைகளை வைத்துள்ளார். ஆளுனருடனான தனது 15 நிமிட சந்திப்பில் விஜய், '' தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் புயல் மழை பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கேட்கும் நிவாரண தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும்'' எனவும் வலியுறுத்தியுள்ளார்.
விஜய்யின் இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் விவாதத்தை கிளப்பி வருகிறது. இந்நிலையில், ஆளுநரை விஜய் சந்தித்ததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை,'' அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் விஜயும் திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, ஆளுநரை சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், @BJP4Tamilnadu தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.…
— K.Annamalai (@annamalai_k) December 30, 2024
வழக்கை திசை திருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்'' என எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.