சென்னை: இயக்குநர் பாலா வணங்கான் திரைப்பட ப்ரமோஷனில் நடிகர் விஜய் குறித்தும், ரசிகர்களின் பொதுவான மனநிலை குறித்தும் பேசியுள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரகனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வணங்கான். இத்திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இயக்குநர் பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அந்த விழாவில் நடிகர்கள், அருண் விஜய், சிவக்குமார், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் வணங்கான் திரைப்பட ப்ரமோஷனில் இயக்குநர் பாலா அவரை பற்றி பேசப்படும் சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தனியார் பத்திரிகை விருது வழங்கும் விழாவில் இயக்குநர் பாலா, நடிகர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது விஜய் நிகழ்ச்சிக்கு வந்த போது, அவருக்கு இயக்குநர் பாலா எழுந்து நின்று மரியாதை அளிக்கவில்லை என சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலில் இயக்குநர் பாலாவிடம் கேட்ட போது, “நான் அவர் வந்ததை கவனிக்கவில்லை. அப்படியே இருந்தாலும் நான் ஏன் விஜய் வந்தால் எழுந்து நிற்க வேண்டும், அவர் என்னை விட வயதில் சிறியவர். நான் வேண்டுமென்றே அவரை அவமானப்படுத்த வேண்டும் என அவ்வாறு செய்யவில்லை” என்றார்.
மேலும் பேசிய பாலா, “எனக்கு விஜய்யை ரொம்பப் பிடிக்கும். ஒரு முறை விஜய்யை சந்தித்த போது, எனது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எனது குழந்தை விஜய்யின் மடியின் மேல் சென்று அமர்ந்தது, எனது குழந்தைக்கு விஜய்யை அப்போது தெரியாது. உடனே விஜய் தனது செல்போனை எடுத்து உங்கள் குழந்தையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளட்டுமா என கேட்டார். எனக்கு அவர் நடந்து கொண்ட விதம் மிகவும் பிடித்திருந்தது. அப்படி ஒரு நல்ல மனிதரை நான் ஏன் அவமானப்படுத்த வேண்டும்” என கூறினார்.
அதேபோல் மற்றொரு தனியார் யூடியூப் சேனலில் ரசிகர்களின் சினிமா அறிவு குறித்து பேசுகையில், “பாலு மகேந்திராவிடம் நான் கற்றுக் கொண்டது, பசி என்று சொன்னால் வாழைப்பழத்தை கொடு, கஷ்டமாக இருந்தால் உறித்து கொடு, ஆனால் ஊட்டிவிடாதே, அவனுக்கு என்று சுயபுத்தி இருக்கிறது என்று சொல்வார். இயக்குநராக நீங்கள் 10 முதல் 15 படங்கள் எடுக்கப்போறீங்க, ஆனால் ரசிகர்களோ 100க்கும் மேற்பட்ட படங்களை பார்க்கின்றனர். அவர்களுக்கு உன்னை விட சினிமா அறிவு அதிகமாக இருக்கும். ரசிகர்களை நாம் ஏமாற்ற முடியாது” என கூறியுள்ளார்.