சென்னை:விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பான்மையான மொழிகளில் நடித்து விட்டார். அம்மொழி ரசிகர்களின் மனதிலும் இடம்பெற்றுவிட்டார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்தாள் இன்று. திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாமும் நமது வாழ்த்துகளை தெரிவிப்பதோடு அவரது நடிப்பு பயணத்தையும் கதாபாத்திர தேர்வுகளையும் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம். இப்படி விஜய் சேதுபதிக்கு பல மொழிகளில் இருந்தும் நடிப்பதற்காக வாய்ப்புகள் வருவதற்கான காரணம், எப்போதும் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற எண்ணத்தை அவர் கைவிட்டதுதான்.
எந்த கதாபாத்திரமானாலும் அந்த கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் தயங்காமல் நடிக்க ஆரம்பித்ததும் அத்தகைய கதாபாத்திரங்களைத் தொடர்ந்து தேர்வு செய்ததும்தான் இந்த எல்லை தாண்டிய ரசிகர் பட்டாளத்திற்கு காரணம். அந்த வகையில் அவரது முக்கிய கதாபாத்திரங்களைக் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
சூது கவ்வும் - தாஸ்
2013ஆம் ஆண்டு வெளியான ’சூது கவ்வும்’ இன்றளவும் கொண்டாடப்படும் திரைப்படமாக இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் Black Comedy வகைமையிலான திரைப்படங்களில் மிக முக்கியமான படம் 'சூது கவ்வும்'. இதில் நரை முடி, தாடியுடன் தாஸ் கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருப்பார் விஜய் சேதுபதி. அந்த படத்திற்கு ஒரு வருடம் முன்புதான் ’பீட்சா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார் விஜய் சேதுபதி.
சூது கவ்வும் பட போஸ்டர் (Credits: Film Poster) அதில் இளமையான நாயகனாக இருந்த அவர், சூது கவ்வும் அப்படியே நேரெதிராக இருந்தார். நடுத்தர வயது தாஸாக தோல்வியடைந்த கடத்தல்காரனாக, கடத்தலுக்கென விதிகள் வகுத்துக் கொண்டு அதனை மீறாமல் வாழ்பவராக கலக்கியிருப்பார். இங்கிருந்துதான் அவரது கதாபாத்திர தேர்வுகளின் மாறுபட்ட தன்மையை ரசிகர்களிடையே உறுதிபடுத்தினார் எனலாம்.
புறம்போக்கு எனும் பொதுவுடமை - யமலிங்கம்
இரண்டு வருட இடைவெளியில் 2015ஆம் ஆண்டு 'புறம்போக்கு எனும் பொதுவுடைமை' திரைப்படத்தில் யமலிங்கமாக நம்மை ஆச்சரியப்படுத்தினார் விஜய் சேதுபதி. எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிறைச்சாலையில் தூக்கிலிடும் பணியைச் செய்யக்கூடியவராக நடித்திருந்தார்.
புறம்போக்கு பட போஸ்டர் (Credits: Film Poster) மிகப்பெரிய அரசியல் தத்துவங்களை மையப்படுத்திய இப்படத்தில் சாமானியனின் குரலாக அந்த அரசியல் தத்துவங்களை புரிந்துகொள்ள முயற்சிக்கும், எதுவுமே தெரியாவிட்டாலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் யமலிங்கமாக நம்மை கவர்ந்திருப்பார். தூக்கிலிடுவது தொடர்பான இறுதிக்காட்சி விஜய் சேதுபதியின் மிகச் சிறந்த நடிப்பு தருணங்களில் ஒன்று.
விக்ரம் வேதா - வேதாச்சலம்
2015க்கு பிறகு 'நானும் ரவுடி தான்', 'சேதுபதி', 'இறைவி' என இரண்டு வருடங்கள் பல்வேறு கதாபாத்திரங்கள் செய்திருந்தாலும் 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம் வேதா', விஜய் சேதுபதியை அடுத்த பரிமாணத்திற்கு உயர்த்தியது எனலாம். வேதாச்சலமாக ரவுடியாக பாசக்கார அண்ணனாக இங்கிருக்கும் காவல்துறை அமைப்பு முறையை கேள்வி கேட்கும் முறையற்றவனாக வசீகரித்திருப்பார் விஜய் சேதுபதி. ஹீரோ வில்லன் என வழக்கமான கமர்ஷியல் படம் போலத் தோன்றினாலும் விக்ரம் வேதா அதிலிருந்து வேறுபட்டது.
விக்ரம் வேதா பட போஸ்டர் (Credits: Film Poster) யார் நல்லவன் யார் கெட்டவன் என்பதை உறுதி செய்ய முடியாத கதை சொல்லல் முறை கையாளப்பட்டிருக்கும். அதனால் வேதாச்சலம் வில்லனாக ஹீரோவாக இரண்டுமாக தெரிவான், அதை சிறப்பாக திரையில் விஜய் சேதுபதி கடத்தியிருப்பார். பின்னாட்களில் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கெல்லாம் இதுதான் முன்னோடி.
96 - ராமச்சந்திரன்
2018ஆம் ஆண்டு வெளியான '96' திரைப்படம் விஜய் சேதுபதியை எல்லோராலும் காதலிக்கப்படும் ஒரு காதலனாக மாற்றியது. அதுவரை பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்கள், படங்கள் நடித்திருந்தாலும் முழுநீள காதல் திரைப்படத்தில் அவர் நடித்ததில்லை. ’காதலும் கடந்தும் போகும்’ இந்த வகையில் சேராது. அப்படியிருக்க காதலுக்காக உருகும் ராம் கதாபாத்திரத்தில் நம்மை உருக வைத்திருபார்.
96 பட போஸ்டர் (Credits: Film Poster) தனது காதலை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் ஒருதலைக் காதலை சுமந்து திரியும் ராமாக காதலிக்க வைத்திருப்பார். நினைத்த காதல் இல்லாமல் தனிமையே வாழ்க்கையாக்கிக் கொண்டவனின் முன்பு மீண்டும் அதே காதலி வந்து நின்றால் இதயம் வெடித்து விடும்தானே. அந்த உணர்வை அத்தனை கவித்துமாக நடிப்பின் மூலம் கடத்தியிருப்பார். '96' ராம் காவியக் காதலனாய் மனதில் நின்றுவிட்டான்.
சூப்பர் டீலக்ஸ் - ஷில்பா
2019ஆம் ஆண்டு வெளிவந்த 'சூப்பர் டீலக்ஸ்', விஜய் சேதுபதியின் மற்றுமொரு முக்கியமான திரைப்படம். தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் அது அவர்களின் மார்க்கெட் முடிந்து போன பிறகே நிகழ்ந்தது. ஆனால் விஜய் சேதுபதி மக்களால் கொண்டாடப்படும் நேரத்தில்தான் சூப்பர் டீலக்ஸின் ஷில்பா கதாபாத்திரத்தில் நடித்தார்.
சூப்பர் டீலக்ஸ் பட போஸ்டர் (Credits: Film Poster) திருநங்கையாக நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இதற்காக திருநங்கைகள் பலரும் அவரை பாரட்டினர். ராசுக்குட்டியுடன் சுற்றித் திரியும் காட்சிகளிலும் சரி ராசுக்குட்டியைப் பார்க்க பள்ளிக்குச் சென்று அங்கு ஏற்படும் அவமானத்தை எடுத்துக் கொள்லும்போதும் சரி ஷில்பாவாக விஜய் சேதுபதி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
மாஸ்டர் - பவானி
கொரோனோ லாக்டௌனுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு வெளிவந்த முதல் திரைப்படம் 'மாஸ்ட'ர். விஜய் கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்த திரைப்படம். விஜய்யின் JD கதாபாத்திரத்தைவிட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தையே மக்கள் கொண்டாடினர். இந்த படத்தின் வணிக வெற்றிக்கு இது முக்கிய காரணமாக அமைந்தது.
மாஸ்டர் பட போஸ்டர் (Credits: Film Poster) வில்லனாக நடித்தாலும் வழக்கமான வில்லத்தனம் இல்லாமல் நக்கலாகவும் அதே நேரத்தில் இரக்கமற்றவனாகவும் நடித்திருப்பார் விஜய் சேதுபதி. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியைப் பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பான வேலைகளைச் செய்யும் பவானியின் நக்கல் கலந்த வில்லத்தனத்தை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். விஜய் சேதுபதிக்கு வில்லனாக இது இரண்டாவது படம். வில்லன் கதாபாத்திரத்திலும் தனது தனித்துவத்தை நிலைக்கச் செய்தார் விஜய் சேதுபதி.
கடைசி விவசாயி - ராமையா
2022ஆம் ஆண்டு வெளியான 'கடைசி விவசாயி'. கிராமத்து மனிதர்களை கதை மாந்தர்களாக கொண்ட இத்திரைப்படத்தில் ராமையாவாக நடித்திருப்பார் விஜய் சேதுபதி. ஆன்மீக ததுவார்த்தமாக ராமையா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். மனிதன் தனது பித்து நிலையைக் கடந்து ஆன்ம நிலையை அடையும் கதாபாத்திரம் அது.
கடைசி விவசாயி பட போஸ்டர் (Credits: 7Cs Entertaintment X Account) கை நிறைய கைக்கடிகாரங்களைக் கட்டிக்கொண்டு இரண்டு மூட்டை போன்ற பைகளை சுமந்து கொண்டு நெற்றியில் பட்டையுடன் தோன்றும் ராமையாவை விஜய் சேதுபதியாக நம்மால் பார்க்கவே முடியாது. தோற்றத்தை வைத்து ஏளனமாக பார்க்கும் நம்மையும் படத்தின் கதாபாத்திரங்களையும் ஆரம்ப காட்சிகளிலேயே பளாரென்று அறைந்துவிடுவார் ராமையா. விஜய் சேதுபதியின் நடித்த 'கடைசி விவசாயி' ராமையா கதாபாத்திரம் அவரது நடிப்புக்கு இன்னொரு மகுடம் என சொல்லலாம்.
மகாராஜா - மகாராஜா
2024ஆம் ஆண்டு வெளியான ’மகாராஜா’ விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம். தேசங்கள் கடந்தும் பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பழி வாங்கும் முறையில் புதிய கதை சொல்லலை காட்டியிருக்கும் படம்தான் ’மகாரஜா’. ஆனால் அதன் மையக் கதாபாத்திரமான மகராஜாவாக சலூன் கடைக்கரராக மற்றுமொரு மாறுபட்ட நடிப்பை வழங்கியிருப்பார் விஜய் சேதுபதி. காவல் நிலையத்தில் செய்யும் அதகளம், மகளிடம் காட்டும் பாசம் என பல்வேறு நிலைகளில் நடிப்பை கொடுத்திருப்பார் விஜய் சேதுபதி.
மகாராஜா பட போஸ்டர் (Credits: Film Poster) இதையும் படிங்க:கமல், சூர்யா, அஜித் என வரிசையாக பெரிய படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்
இப்படியாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகன் என்ற எல்லைக்குள் அடங்காமல் நடிப்பின் நாயகனாக இந்திய துணைக்கண்டம் முழுமைக்கும் தனது நடிப்பு பயணத்தை விரித்துள்ளார் மக்கள் செல்வன்.