சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'தி கோட்' திரைப்படம் மிகப் பெரிய வசூலைக் குவித்து வருகிறது. இப்படி வசூல் மன்னனாக இருக்கும் போதே அரசியலில் ஈடுபட முடிவு செய்து, 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் இந்த கட்சியை தொடங்கிய விஜய் உறுப்பினர்கள் சேர்க்கை பணிகளை மும்முரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அரசியல் கட்சி தொடங்கி விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார்.
அதன்படி வெங்கட் பிரபு படத்தை முடித்துவிட்ட அவர் அடுத்து தனது கடைசி படமாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். எச்.வினோத் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். ஆனால் கமல், மணிரத்னம் படத்தில் நடிக்கச் சென்றதால் தற்போது விஜய் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இது அரசியல் படமாக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அனைவரும் விரும்பும் கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.