சென்னை:இசையமைப்பாளராக திரையுலகில் எண்டரி கொடுத்த விஜய் ஆண்டனி, ரசிகர்களை வைஃப் (Vibe) ஆக்குவதில் வல்லவர். தனது இசையின் மூலம் தனக்கான ரசிகர்களை உருவாக்கியிருக்கும் இவர், 'நான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக எண்டரி கொடுத்ததை அடுத்து, சலீம், பிச்சைக்காரன் 1,2 மற்றும் கோடியில் ஒருவன் போன்ற நல்ல படங்களை தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஹீரோ, டைரக்டர், எடிட்டர், தயாரிப்பாளர் என அனைத்திலும் சகலகலா வல்லவனாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இசையைப் போன்று நடிப்பில் கொடிகட்டி பறக்கவில்லை என்றாலும், வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து, தனக்கான தனி இடத்தை தக்கவைத்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த வாரம் இவர் நடிப்பில் 'ரோமியோ' படம் வெளியானது.
இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில், மீரா விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவான இப்படம், திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனி, தலைவாசல் விஜய், நடிகை மிருணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த ரொமாண்டிக் காதல் படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பாடல்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.