சென்னை: ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகி பாபு, நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா ஆகியோர் நடித்துள்ள தி கோட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய அர்ச்சனா கல்பாத்தி, "இது எங்களுடைய 25வது திரைப்படம். இதுவரை திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இதுவரை விஜய் நடித்த திரைப்படத்திலேயே அதிகமான வெளிநாட்டு படப்பிடிப்பு நடத்திய திரைப்படம் இதுதான்” என்றார்.
பின்னர் பேசிய இயக்குநர் வெங்கட்பிரபு, "இந்த கதையை முதலில் அர்ச்சனாவிடம் தெரிவித்தேன். நாங்கள் முதலில் கதையைப் பற்றி பேசினோம், பிறகு விஜயிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. பின்பு படமாக நடந்தது. அமெரிக்காவின் எல்லையில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். டெட்பூல் & வால்வரின் (Deadpool & Wolverine) திரைப்படத்தில் பணியாற்றிய லோலா என்ற VFX கம்பெனி மூலமாகத்தான் இந்த படத்தின் VFX காட்சிகள் அமைந்துள்ளது.
படம் பார்த்து முடித்தவுடன் இந்த படத்தின் பாடல்கள் எல்லோருக்கும் பிடித்துவிடும். அந்த வகையில், விஷூவல் ட்ரீட்டாக இருக்கும் பாடல் காட்சிகள். படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்துவிட்டனர். எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் முகம் சுழிக்காத வகையில் இந்த திரைப்படம் அமைந்திருக்கும்” என்றார்.
செய்தியாளர்கள் கேள்வி - பதில் :விஜயிடம் ஒரு விஷயத்தை எவ்வளவு ஒழுக்கமாக செய்வது என்பதை கற்றுக் கொண்டேன். முதலில் பயந்துகொண்டு இருந்தேன். ஆனால், எல்லோருக்கும் அதனை ஈஸி ஆக்கிவிட்டார். மருதமலை மாமணியே பாடல் இடம் பெற்றிருப்பது குறித்த கேள்விக்கு, நான் கில்லி படத்தின் மிகப்பெரிய ரசிகன். படத்தில் ஒரு இடம் அதற்கு ஏதுவாக அமைந்தது. எனவே, கில்லியில் வரும் ஒரு காட்சியை இதில் பயன்படுத்தி உள்ளோம்.
இதற்கு முன்பு வெளியான பாடல்களில் உள்ள De - Aging லுக் நன்றாக இல்லை என்று சமூக வலைத்தளத்தில் பரவியது என்ற தொடர்பான கேள்விக்கு, டிரெய்லரில் தோன்றிய De - Aging விஜயின் லுக் தான் தற்போது வரை கிட்டத்தட்ட முடிவு செய்துள்ளோம்.
முதலில் இந்த திரைப்படத்திற்காக விஜய் கிளீன் சேவ் செய்தபோது மீசையை ஏன் ஷேவ் செய்ய வைத்தீர்கள் என்று என்னை திட்டினார்கள். 22 வயதுடைய விஜயாக காண்பிக்க வேண்டும். கடைசியில் என்னைப் போன்று இல்லாமல் போய்விடப் போகிறது என்னை மாதிரியே வைத்துக்கொள் என்று விஜய் கூறினார்.
ஸ்பார்க் பாடலின் தாக்கத்திற்குப் பிறகு De - Aging விஜயில் மீண்டும் வேலை செய்துள்ளோம். எங்களுக்கும் இது ஒரு பாடமாக அமைந்துள்ளதாக கூறினார். மேலும், இந்த படத்திற்கும், ஜெமினி மேன் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த கதை வேறு, இந்த கதை வேறு என்றார்.