சென்னை:தாராகை சினிமாஸ்தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்". நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகியோர் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள, இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், “இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் ஒரு நாள் போனில் பேசினார். நான் நடிக்க வேண்டும் என்றார்.
நான் யூடியூபில் பேசுவது பற்றித் தெரியுமா என கேட்டேன், தெரியும், தெரிந்து தான் கூப்பிட்டேன் என்றார். இவரிடம் உள்ள நல்ல விஷயம் வசனத்தை முதல் நாளே போனில் அனுப்பிவிடுவார். அவர் எழுதிய டயலாக்கை அப்படியே சொன்னேன். அப்போதே தெரியும், இந்தப்படம் கண்டிப்பாக சர்ச்சையில் சிக்குமென்பது. முழுக்க முழுக்க அரசியலில் நடந்த உண்மைச் சம்பவங்களை எடுத்திருக்கிறார்.
ஆனால், போஸ்டரில் இப்படத்தில் அரசியல் இல்லை என பொய் சொல்லியிருக்கிறார். இன்று எனக்கு தமிழ்நாட்டில் பெண் ரசிகைகள் அதிகம் இருக்கிறார்கள். நான் எப்போதும் தவறான தகவலைப் பேசுவதில்லை. நான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எல்லோரையும் விமர்சனம் செய்கிறேன். ஆனால், என் சில வீடியோக்களை மட்டும் பார்த்துவிட்டு தவறாக பேசுகிறார்கள். நான் அரசியல்வாதி கேரக்டர் செய்துள்ளேன். இயக்குநர் ஒரு சிறு அசைவு கூட சரியாக வர வேண்டும் என அடம்பிடித்து எடுப்பார். டயலாக்கை எல்லாம் மாற்றவிடமாட்டார். மிக நன்றாகப் படத்தை எடுத்துள்ளார்” என்றார்.