ஈரோடு: அரசு ஒதுக்கிய இடத்தில் மயான வசதி கேட்டு உயிரிழந்தவரின் உடலை வைத்துக் கொண்டு, ஈரோடு பிரதான சாலையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் வருவாய் துறையினரின் 3 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியலை கைவிட்ட அப்பகுதியினர், உடலை பவானி ஆற்றங்கரையில் நல்லடக்கம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள ஒரிச்சேரிபுதூர், காமராஜர் நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு முறையான மயான வசதி இல்லாத காரணத்தால், பவானி ஆற்றங்கரையில் கடந்த பல வருடங்களாக உயிரிழந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதும், எரியிவுட்டுவதும் செய்து வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், மயான வசதி வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் 10 ஹெக்டேர் பரப்பளவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அப்பகுதியில் மயானம் வருவதற்கு அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நிலத்தை அளவிடும் பணியை வருவாய்த் துறையினர் கைவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆம்பூரில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..உறவினர்கள் சாலை மறியல்!
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த கருப்பாயி (60) என்ற நபர் நேற்று முன்தினம் (நவ.15) இயற்கை எய்தியுள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கேட்டு, பவானி - சத்தியமங்கலம் சாலையில் இறந்த நபரின் உடலை வைத்து உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் பவானி வட்டாட்சியர் சித்ரா தலைமையிலான வருவாய்த்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால், பேச்சுவார்த்தைக்கு உடன்படாத கிராம மக்கள் அரசு ஒதுக்கிய இடத்தில் மயானம் ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே சாலை மறியலைக் கைவிடுவோம் என தெரிவித்து, கொட்டிய சாரல் மழையிலும் இறந்த நபரின் உடலை நடு ரோட்டில் வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், அரசு ஒதுக்கிய இடத்திற்கு சென்று பார்வையிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், அப்பகுதிக்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாத காரணத்தால், முதலில் பாதை வசதியை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, பின்னர் மயானம் ஏற்படுத்தித் தருகிறோம் என ஊர் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்ட மக்கள், சாலையின் குறுக்கே மறியல் போராட்டத்திற்காக வைக்கப்பட்ட கருப்பாயின் உடலை எடுத்துச் சென்று பவானி ஆற்றங்கரையோரம் அடக்கம் செய்தனர். மேலும், இந்த சம்பவத்தின் போது, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மயான வசதி வேண்டும் என இறந்தவரின் உடலை வைத்துக் கொண்டு சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்