சென்னை : பிராமண சமூகத்தின் மீது தொடர்ந்து அவதூறுகள் பரப்பி வருவதாகக் கூறி, இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளானது.
இவர் பேசிய கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இவ்வாறு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் வந்ததையடுத்து நடிகை கஸ்தூரி சமுக வலைத்தளம் மூலம் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில், எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது 192, 196(1)(a), 353(1)(b) and 353(2) BNS ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோரி நடிகை கஸ்தூரிக்கு சம்மன் வழங்க அவருடைய இல்லத்திற்கு போலீசார் சென்ற போது அவருடைய வீடு பூட்டி இருந்ததாகவும், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியானது.
இதையும் படிங்க : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு; நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது!
இதையடுத்து தலைமறைவான நடிகை கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர் ஹைதராபாத்தில் உள்ள வீட்டிற்கு சென்று பதுங்கி இருப்பதாக தகவல் வந்ததையடுத்து தனிப்படை போலீசார் ஹைதராபாத்திற்கு சென்று அங்கு தேடினர். ஆனால், அந்த வீட்டையும் பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனால் தனிப்படை போலீசார் ஹைதராபாத் மற்றும் ஆந்திராவில் முகாமிட்டு தேடி வந்த நிலையில் ஹைதராபாத்தில் வைத்து நடிகை கஸ்தூரியை சென்னை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டார்.
அதன் பிறகு எழும்பூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்திற்கு நடிகை கஸ்தூரியை அழைத்து சென்று எழும்பூர் ஐந்தாவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரகுபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை கஸ்தூரிக்கு நவ 29ம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளித்து உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்