சென்னை: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரையரங்குகளின் வாழ்வாதாரம் குறித்து விவாதித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக அரசுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இந்த பொதுக்கூட்டமானது நடைபெற்றது. திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% வசூலிக்க அனுமதி தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரையரங்க கட்டணம் 100, 120, 150 மற்றும் மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளுக்கு 190 ஆகிய கட்டணங்களில் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும் திரையரங்குகளில் 20 சதவிதம் உயர்த்தப்படும் பட்சத்தில் 120 ரூபாயாக கட்டணம் உயரும்.
அதேபோல் 120 ரூபாய் டிக்கெட்களுக்கு 20 சதவிதம் உயர்த்தப்படும் பட்சத்தில் 144 ரூபாயாக விலை உயர்த்தப்படும். 150 ரூபாய் டிக்கெட்கள் 180 ரூபாய்க்கு விற்கப்படும். மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளில் 190 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட்கள் 20 சதவிதம் விலை உயர்த்தப்படும் பட்சத்தில் 220 ரூபாய்க்கு விற்கப்படும்
மேலும் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டிலும் இது போன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தமிழ் படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் திரையிட அனுமதிக்க வேண்டும் என்றார்.