சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்து கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திகில் படம் பீட்சா. குறும்பட இயக்குநராக இருந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. வித்தியாசமான இந்தப் படம் த்ரில்லர் பட வரிசையில் பேசப்படும் படமாக மாறியது. அதனைத் தொடர்ந்து, பீட்சா 2 மற்றும் 3 வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ படம் எடுக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை K.A ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகனும், கடாரம் கொண்டான் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான அபி ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா நாயகியாக நடிக்கிறார். எல் கே ஜி, மூக்குத்தி அம்மன், கொரில்லா, களத்தில் சந்திப்போம், அயலி, சூது கவ்வும் 2, 'யங் மங் சங், ஃபிளாஷ்பேக், ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் இணை மற்றும் துணை இயக்குநராக பணியாற்றியுள்ள K.A ஆண்ட்ரூஸ், பீட்சா 4 திரைப்படத்தை இயக்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.