சென்னை: நடிகர் கஞ்சா கருப்பு சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு ரூபாய் 20 ஆயிரத்துக்கு ரமேஷ் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். சென்னையில் சினிமா சூட்டிங் நடக்கும் போதெல்லாம் அந்த வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் கஞ்சா கருப்பு மீது வீட்டின் உரிமையாளர் ரமேஷ், மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கஞ்சா கருப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வீட்டின் உரிமையாளர் ரமேஷ், ”கஞ்சா கருப்பு ரூபாய் 3 லட்சம் வாடகை பாக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி வீட்டை வேறு ஒரு நபருக்கு உள்வாடகைக்கு விட்டுள்ளதாகவும், மதுபானம் மற்றும் தகாத செயல்களை மேற்கொண்டு வீட்டை லாட்ஜ் போல மாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக கஞ்சா கருப்புவிடம் கேட்ட போது நடிகர் கஞ்சா கருப்பு மூன்று நாட்களுக்கு முன்னர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து தனது வீட்டை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும், தான் கடுமையான நிதிச் சிக்கலில் இருப்பதாகவும் ரமேஷ் கூறியுள்ளார். மேலும் கஞ்சா கருப்பு தனக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த ஆதாரங்களையும் காண்பித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கருப்பு வாடகை பாக்கி வைத்துள்ளதாக புகார் வழங்கபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்த ராஜமௌலி... போக்கிரி பட வசனத்துடன் ரிப்ளை செய்த மகேஷ் பாபு! - RAJAMOULI ABOUT SSMB29
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நடிகர் கஞ்சா கருப்பு பிதாமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து சிவகாசி, உனக்கும் எனக்கும், கிழக்கு கடற்கரை சாலை, தாமிரபரணி, திருமகன், அழகிய தமிழ்மகன், நாடோடிகள், எங்கள் ஆசான், யோகி, வம்சம், தம்பிக்கோட்டை, குரங்கு பொம்மை, சண்டக்கோழி 2 என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பருத்திவீரன், அறை எண் 305இல் கடவுள், சுப்ரமணியபுரம் ஆகிய படங்களில் கஞ்சா கருப்பு கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது