ஹைதராபாத்: இயக்குநர் ராஜமௌலி இயக்கவுள்ள மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ’பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜமௌலி. ’நான் ஈ’ திரைப்படம் மூலம் ராஜமௌலி தனது திறமையை நிரூபித்து இருந்தாலும், பாகுபலி திரைப்படம் ராஜமௌலியை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இன்று வரை பாகுபலி திரைப்படத்தின் மேக்கிங் பெரிய அளவில் பேசப்படுகிறது. பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் பெரிய அளவில் பாராட்டை பெற்றது. அதுவும் பாகுபலி திரைப்படம் நடிகர் பிரபாஸ் திரை வாழ்க்கையை மாற்றியது என கூறலாம். அப்படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்திய சினிமா அளவில் சூப்பர் ஹீரோ அந்தஸ்திற்கு உயர்ந்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் வசூல் சாதனை படைத்தது.
இதனைத்தொடர்ந்து ராஜமௌலி ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற மற்றொரு பிரமாண்ட படைப்பை இயக்கினார். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இரண்டு பெரிய ஹீரோக்கள் ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், உலக அளவில் 1200 கோடி இமாலய வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனைத்தொடர்ந்து அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை ராஜமௌலி இயக்குகிறார். இப்படத்திற்காக மகேஷ் பாபு தனது உடல் எடையை குறைத்துள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கவுள்ளது. மேலும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா மற்றும் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், ப்ரியங்கா சோப்ரா ஹைதராபாத் வந்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே இயக்குநர் ராஜமௌலி இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அவரது பதிவில், பின்னணியில் சிங்கத்துடன், கையில் பாஸ்போர்ட்டுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு நடிகர் மகேஷ் பாபு, “ஒரு வாட்டி கமிட் பண்ணிட்டனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன்” என ரிப்ளை செய்துள்ளார்.
இதையும் படிங்க: ”எனது திரை வாழ்விலேயே இதுதான் சிறந்த படம்”.. ’மதகஜராஜா’ வெற்றிக்கு உருக்கமாக நன்றி சொன்ன விஷால் - VISHAL THANKING THE AUDIENCE
மகேஷ் பாபு பதிவிட்டுள்ள வசனம் அவர் நடித்த போக்கிரி தெலுங்கு படத்தில் இடம்பெற்றது. போக்கிரி தமிழ் ரீமேக்கில் விஜய் நடித்தார். இதனிடையே ராஜமௌலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு அனுமனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் 2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிறது.