தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“நாங்கள் தவறாக புரிந்து கொள்ளவில்லை” - விஜய் ஆண்டனியின் விளக்கத்திற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு பதில்! - vijay antony jesus issue

Vijay Antony Jesus issue: இயேசு குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த சர்ச்சை குறித்து விஜய் ஆண்டனி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு பதிலளித்துள்ளனர்.

விஜய் ஆண்டனிக்கு எச்சரிக்கை
விஜய் ஆண்டனிக்கு எச்சரிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 10:59 PM IST

சென்னை: ரோமியோ படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, “குடிப்பழக்கம் நம்ம ஊரில் ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது, முன்பு சாராயம் என்று இருந்தது. 2,000 ஆண்டுகளுக்கு முன் ஜீஸஸ் கூட திராட்சை ரசம் குடித்திருக்கிறார்” என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து, விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து விஜய் ஆண்டனி இன்று வெளியிட்ட அறிக்கையில், “நான் கூறிய பதில்களை இணைத்து, தவறாக அர்த்தப்படுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை, நீங்களும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை, நீங்கள் இயேசு கிறிஸ்துவை தவறாக சித்தரித்தீர்கள். உங்களுடைய முழு காணொளியைப் பார்த்த பிறகு தான் நாங்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டோம். தொடர்ந்து இயேசு கிறிஸ்துவையும், கிறிஸ்தவ மதத்தையும் விளம்பரத்திற்காக கீழ்த்தரமாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டு அரசியலிலும், சினிமாவிலும் உண்டு என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

இனி உங்களின் திரைப்பட விளம்பரத்திற்காக இயேசு கிறிஸ்து மட்டுமல்ல, பிற மதத்தைச் சார்ந்த மகான்களையும் கூட பொதுவெளியில் கொச்சைப்படுத்தி பேசாதீர்கள். அது உங்களுக்கும் நல்லதல்ல, நம் தேசத்திற்கும் நல்லதல்ல. அது மட்டுமல்ல, இதை குறித்து பேச அறிக்கை விடுவதற்கு முன்பு, உங்களுடைய மக்கள் தொடர்பாளர் ரேகா என்பவரை நாங்கள் தொடர்ந்து அழைத்தோம். ஆனால் அவர் எங்களது தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"இயேசுவைப் பற்றி தவறாகச் சித்தரிக்க கனவிலும் தோன்றாது"… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி!

ABOUT THE AUTHOR

...view details