சென்னை: நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று 2025ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நேற்று நள்ளிரவு மக்கள் அனைவரும் பொது இடங்களில் ஒன்று கூடி பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் திரைப் பிரபங்கள் வரை பலர் வாழ்தது தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார். ரஜினி வெளியிட்டுள்ள பதிவில் அவர் நடித்து, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற வசனத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சிறப்பு நாளன்றும் ரஜினிகாந்த் ரசிகர்களை தனது இல்லத்தில் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இன்று காலை தனது வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் அரசியல் ரீதியாக பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.