சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ’டிராகன்’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
’ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஷ்வத் மாரிமுத்து தொடர்ந்து சிம்புவின் ’காட் ஆஃப் லவ்’ திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். ‘டிராகன்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
டிராகன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ராகவன் எனும் கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
கல்லூரியில் மிக மோசமான மாணவனாக வலம் வரும் ராகவனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல், வெற்றி, தோல்விகளை சொல்கிற படமாக இருக்கும் என டிரெய்லர் பார்க்கும்போது தெரிகிறது. வழக்கமான கமர்ஷியல் அம்சங்கள் எதையும் மிஸ் பண்ணாமல் டிரெய்லரை உருவாக்கியுள்ளனர்.
கொஞ்சமாக சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் சாயல் இருப்பதாகவும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிரெய்லரில் சர்ப்ரைஸாக சினேக, இந்த படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர். இளைஞர்களை ஈர்க்கும் விதமாக படம் உருவாகியுள்ளது என டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.
இதையும் படிங்க: சிங்கிள் டேக்கில் மிரட்டிய சூர்யா... படத்தை காமிக்ஸ் வடிவில் வெளியிட்ட ’ரெட்ரோ’ படக்குழு
முன்னதாக காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவிருந்த ’டிராகன்’ திரைப்படம், அஜித்தின் ’விடாமுயற்சி’ ரிலீஸால் பிப்ரவரி 21ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க கல்லூரி காதல் என இளைஞர்களை ஈர்க்கும் கதையாக உருவாகியுள்ள ’டிராகன்’ திரைப்படம் வெளியாகும் பிப்ரவரி 21ஆம் தேதியில் நடிகர் தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படமும் வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க புதுமுக நடிகர்கள் நடித்துள்ள அந்த படத்தின் கதையும் இளஞர்களை ஈர்க்கக்கூடிய வைகையில் காதல் கதையாக உருவாகியுள்ளது, அந்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.