சென்னை: கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் ’மதகஜராஜா’ படத்தின் அறிவிப்பு வெளியாகியது. கலகலப்பு முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கிய விஷால் படம் என்பதால் ரசிகர்களிடையெ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படம் குறித்து அறிவிக்கப்பட்ட வேகத்தில் மொத்த படப்பிடிப்பும் 2012ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்தது. இப்படம் 2013ஆம் ஆண்டே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை.
இந்த படத்தில் தற்போது கதாநாயகனாகிவிட்ட சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
அவரது இசையில் விஷால் பாடிய 'மை டியர் லவ்வரு' 11 வருடங்களுக்கு முன்பு வைரல் ஹிட்டானது. ஆர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் ‘மதகஜராஜா’வை தயாரித்தது. அப்போது ரசிகர்கள் மதகஜராஜாவை ‘எம்.ஜி.ஆர்’என சுருக்கமாக அழைத்து வந்தனர்.
இந்த வருடம் வரும், இந்த பொங்கலுக்கு வரும் என ஒவ்வொரு வருடமும் எதிர்பார்க்கப்பட்ட மதகஜராஜா. இணையத்திலாவது நேரடியாக ரிலீஸ் செய்யப்படுமா? என அடிக்கடி இயக்குநர் சுந்தர் சியிடம் கேட்கப்பட்டது. அண்மையில் நடந்த ’அரண்மனை 4’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட மதகஜராஜாவைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இப்போது மதகஜராஜா வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என சுந்தர் சி அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.