சென்னை: ஜி.வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ’கிங்ஸ்டன்’ படத்துடைய டீசர் நேற்று வெளியாகி சமூக ஊடங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடல் சார்ந்த கதைக்களமாக ’கிங்ஸ்டன்’ உருவாகியுள்ளது, படத்தின் டீசரிலேயே பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த கிராபிக்ஸ் காட்சிகளும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளாராக நூறு படங்களை தொட்டுவிட்ட ஜி.வி. பிரகாஷ் குமார் நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து இசையமைப்பதையும் நிறுத்தவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நிறைய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ். 2015ஆம் ஆண்டு ’டார்லிங்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஜி.வி.பிராகாஷ் குமாருக்கு ’கிங்ஸ்டன்’ 25வது படம்.
இதையும் படிங்க:"ஒரு தெய்வம் தந்த பூவே..." - பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உயிரிழந்தார்!
’மதயானை கூட்டம்’ திரைப்படத்திற்கு பிறகு ’கிங்ஸ்டன்’ படத்தை ஜி.வி பிரகாஷே தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் திவ்யபாரதி, இளங்கோ குமரவேல் ஆகியோர் நடிக்க அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். கோகும் பினோய் ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தியாவின் முதல் கடல் சார்ந்த பேண்டஸி அட்வென்சர் திரைப்படமாக ’கிங்க்ஸ்டன்’ உருவாகியுள்ளது என விளம்பரப்படுத்தியுள்ளனர். கடலுக்குள் செல்லும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு அமானுஷ்ய சக்திகளிடம் மாட்டிக்கொள்வதாக இருக்கிறது கிங்ஸ்டன் டீசர். டீசர் முழுக்க ஒரு குரல் பேசுகிறது. அந்த குரல் கடலைப் பற்றியும் அங்கு நடக்கும் அமானுஷ்யங்களையும் ஆபத்துகளையும் சொல்கிறது. தூத்துக்குடி வட்டார வழக்கு மொழியில் டீசரின் வசனங்கள் அமைந்துள்ளன.
கடலுக்குள் பெரும்பான்மையான கதை நிகழ்வதால் அதற்கான கிராபிக்ஸ் காட்சிகளை நன்றாக உருவாக்கியுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் உடைய படம் என கூறப்படுகிறது. கிங்ஸ்டன் டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .