சிவகங்கை: பொங்கல் பானை என்றாலே அது பூவந்திப் பானைதான்.. மண் மணம் மாறாமல் உருவாக்கித் தரும் மக்களின் கைவண்ணத்தில் இப்பகுதி பொங்கல் பானைகள் தமிழ்நாடு முழுவதும் பிரசித்திப் பெற்றவை. பூவந்திப் பானையில் வைக்கிற பொங்கலுக்கு ஈடு இணை எதுவுமில்லை என்ற அளவிற்கு சிவகங்கை மாவட்டத்தின் மற்றொரு பெருமையாகத் திகழ்கிறது. அதுகுறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது பூவந்தி. தனது மண்ணுக்கே உரித்தான தனிச்சிறப்பு மிக்க பொங்கல் பானைகளால் பெயர் பெற்றுத் திகழ்கிறது. அழகான நேர்த்தியான வடிவமைப்பில் இங்கு உருவாக்கப்படும் இந்தப் பானைகள் சிவகங்கை மாவட்டம் முழுவதும் மட்டுமன்றி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. இன்றைக்கும் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் வைக்க விரும்பும் மக்களின் முதல் விருப்பமாக பூவந்தி பொங்கல் பானைகள் திகழ்கின்றன என்றால் அது மிகையல்ல.
மதுரை மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூவந்தி பொங்கல் பானையின் பிரம்மாக்களை ஈடிவி பாரத் ஊடகத்திற்காக சந்தித்தோம். அதிகாலையில் எழுந்து மண்ணை மிதித்து, பிசைந்து, பானைகளை உருவாக்கி, வெயிலில் காய வைத்து, பிறகு வண்ணம் பூசி, சுட்டு எடுக்கிறார்கள். இங்கிருந்து தொண்டி வரை ஒவ்வொரு பொங்கலுக்கும் 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பானைகள் வரை விற்பனைக்குச் செல்கின்றன.
மண்பானை சமையல்: பூவந்தியைச் சேர்ந்த மண்பாண்ட கலைஞர் அஞ்சூரான் கூறுகையில், "இங்கு 30 குடும்பங்கள் மண்பாண்டத் தொழில் சார்ந்தவர்கள். பொங்கல் சமயம் காளையார்கோவில், சிவகங்கை, மதகுபட்டி, கல்லல், தொண்டி வரைக்கும் இங்கிருந்து பொங்கல் பானைகள் விற்பனைக்கு செல்கின்றன.
மற்ற நேரங்களில் உருவாக்கப்படும் முளைப்பாரி ஓடு, ஜாடி, சுட்டி போன்றவை மதுரைக்கு செல்கின்றன. தற்போது அனைத்துக் கண்மாய்களிலும் தண்ணீர் இருப்பதால் மண் அள்ளி வேலை செய்வது கடினமாக உள்ளது. வெயில் இருந்தால் மட்டுமே எங்கள் தொழில் சாத்தியம். மழை பெய்தால் சிக்கல் தான்.
முன்பு அனைத்துக் குடும்பங்களிலும் மண்பாண்டத்தில்தான் சமையல் செய்தனர். இப்போது அலுமினியம், சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். மண்பானை சமையல், மண்பானை தண்ணீர் உடலுக்கு நல்லது. ஆனால் இதனை யாரும் பின்பற்றுவது இல்லை.
மானாமதுரையில் கூரை அமைத்து அங்குள்ள மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு அரசு உதவுவது போன்று எங்களுக்கும் உதவி செய்ய வேண்டும். அதேபோன்று எங்கள் தொழிலுக்காக மண் அள்ளுவதற்கும் உரிமை தர வேண்டும். அனைத்து பொதுமக்களும் மண்பானைச் சமையலுக்கு மாற வேண்டும்' என்று வேண்டுகோள் வைக்கிறார் அஞ்சூரான்.
அரசின் உதவித்தொகை கூட கிடைக்கவில்லை: அதே ஊரைச் சேர்ந்த பிச்சை கூறுகையில், "எங்கள் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இந்தத் தொழிலுக்குத் தேவையான மண், மூட்டம் போட விறகுகள் உள்ளிட்டவை கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. தற்போது இந்தத் தொழிலை 7 குடும்பங்கள் மட்டுமே செய்து வருகின்றன. பொங்கலை ஒட்டி சராசரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஒரு வீட்டுக்கு 2,500-லிருந்து 3,000 ஆயிரம் பானைகள் வரை உருவாக்கப்படுகின்றன. அரசுத் தரப்பில் இதுவரை எந்த உதவிகளும் இல்லை. இதற்கான கருவியைக்கூட எனது கைக்காசிலிருந்துதான் வாங்கியுள்ளேன். மண்பானைகளைப் பாதுகாக்கும் இடத்தை எங்களது கையிலிருந்து பணம் போட்டு நாங்கள் கட்டியுள்ளோம். எனக்கு பிள்ளைகள் கிடையாது. கடன் வசதிகூட எங்களுக்கு செய்து தரப்படவில்லை. அடைமழைக் காலமான ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அரசாங்கம் தரும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகைகூட எங்கள் ஊரில் யாருக்கும் தரவில்லை' என்கிறார் வேதனையுடன்.
மின்சாரத்துக்கே ரூ.1500: மீனாட்சி என்பவர் கூறுகையில், 'மண்பாண்டத் தொழில்தான் எங்களுக்கு ஒரே ஆதாரம். அரசுத்தரப்பிலிருந்து எந்த உதவியும் எங்களுக்குக் கிடையாது. ஆட்டோவில் அல்லது தலைச்சுமையாகவே மண்ணை அள்ளிக்கொண்டு வருகிறோம். இந்தத் தொழில் மூலமாக மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் அல்லது ரூ.3 ஆயிரம்தான் எங்களுக்கு வருமானமாகக் கிடைக்கிறது. நாங்களாக கை ஊண்டி கர்ணம் பாய்கிறோம்.
எங்களது வீட்டுக்கான மின் இணைப்பையே இரண்டாகப் பிரித்து, இயந்திரம் இருக்கின்ற பகுதியில் தனியாக மின் இணைப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதனால் மின்சாரத்திற்கு மட்டுமே ரூ.1,500 செலவாகிறது' என்கிறார் மனகுமுறலுடன்.
இத்தனை வேதனைகள் இருந்தபோதும் கூட பொங்கலுக்காக தயார் செய்யப்படும் இந்தப் பானைகளை மிகுந்த சிரமேற்கொண்டு செய்து வருகிறார்கள். பொதுமக்கள் மண்பானைகளில் பொங்கல் பொங்கினால், எங்கள் வீடுகளிலும் மகிழ்ச்சிப் பொங்கல் பொங்கும் என்கின்றனர் பூவந்தி மண்பாண்டக் கலைஞர்கள்.