சென்னை: வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறனின் கனவு திரைப்படமாக கருதப்படும் ’வாடிவாசல்’ திரைப்படம் விரைவில் தொடங்கப்படுகிறது. கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.
கடந்த 2017இல் ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி மதுரையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்றது. சென்னை மெரினாவில் நினைத்து பார்க்க முடியாத அளவில் லட்சக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு போராட்டம் இந்தியாவையே திரும்பிக் பார்க்க வைத்தது. சமூக பிரச்சனைகளை தனது படங்களில் தீவிரமாக சொல்லும் வெற்றிமாறன் ஜல்லிக்கட்டு போராட்டத்தை இப்படத்தில் எவ்வாறு காட்சிப்படுத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எழுந்துள்ளது.
அந்த அறிவிப்புடன் மிரட்டலான ப்ரோமோ வீடியோவும் வெளியானது. அந்த ப்ரோமோவில் சூர்யா, ஜல்லிக்கட்டு வாடிவாசலில் காளையை பிடிக்க நிற்பது போல காட்சி இடம்பெற்றது. இதனையடுத்து ரசிகர்கள் மத்தியில் வாடிவாசல் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் வெற்றிமாறன் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் ’விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்க தொடங்கினார். அப்படங்களுக்கு பல ஆண்டுகள் ஆனதால் வெற்றிமாறன் மற்றும் சூர்யா செல்லும் இடங்கள் எல்லாம் ’வாடிவாசல்’ தொடங்குவது எப்போது என கேள்வி எழுப்ப தொடங்கினர்.