சென்னை:தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய சினிமா அளவில் சிறந்த நடிகர் என்று பெயர் பெற்றவர் விஜய் சேதுபதி. சாதாரண துணை கதாபாத்திரங்களில் நடித்து தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். இவரது 50வது படமான மகாராஜா சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா வித்தியாசமான திரைக்கதையின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. விஜய் சேதுபதி, சிங்கம்புலி, ஒளிப்பதிவாளர் நட்டி, அனுராக் காஷ்யப் ஆகியோரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் ஏற்கனவே தான் இயக்கிய முதல் படமான 'குரங்கு பொம்மை' மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். குரங்கு பொம்மை போன்று இந்த படமும் வித்தியாசமான திரைக்கதைக்காக பேசப்பட்டது. சாதாரண பழிவாங்கும் கதையில் காலத்தை வைத்து நித்திலன் செய்த மேஜிக் தியேட்டரில் காண்போரை சீட் நுனியில் அமர வைத்தது. ஃபேஷன் ஸ்டூடியோஸ் சுதன் தயாரிப்பில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா அவரது திரை வாழ்வில் மைல்கல்லாக அமைந்தது.