சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியை முதற்கட்ட நடவடிக்கையாக அக்கட்சி கையில் எடுத்துள்ள நிலையில், இதற்காக ஒரு சிறப்பு செயலியையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
அதிகபட்சமாக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று அறிமுகமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலையும் விரைவில் வெளியிட உள்ளதாகவும், அவர்கள் மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணியுடன் சேர்ந்து, உறுப்பினர் சேர்க்கை பணியினை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், ஏற்கனவே உள்ள பொறுப்பாளர்களுக்கு கீழ்தான் புதிய உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய உறுப்பினர் சேர்க்கையின்போது, மாவட்டப் பொறுப்பாளர்கள் குழுவிலோ அல்லது சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் குழுவிலோ கட்டாயம் ஒரு பெண் நிர்வாகி இடம் பெற வேண்டும் என கட்சித் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏற்கனவே மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.