சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் சீசன் அவ்வப்போது விறுவிறுப்பாக செல்லும் நிலையில், சில சமயம் எந்த வித சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்வதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 7 சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வாரம் எவிக்ஷனில் தர்ஷிகா வெளியேறினார். அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் செங்கல் டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் சிறந்த போட்டியாளர்களை பிக்பாஸ் தேர்வு செய்து கூற சொன்னார். அதில் சிறந்த போட்டியாளர்களாக முத்துக்குமரன், ஜெஃப்ரி, பவித்ரா ஆகியோரை மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். சிறப்பாக விளையாடாத போட்டியாளராக சவுந்தர்யா, அன்ஷிதா ஆகியோரை தேர்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த வாரம் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்கள் இடையே அடுத்த வாரத்திற்கான கேப்டன்ஷிப் டாஸ்க் வைக்கப்பட்டது. அந்த போட்டியில் முதலாவதாக ஜெஃப்ரி வெளியேறினார். பின்னர் பவித்ரா, முத்து இடையேயான போட்டியில் பவித்ரா வெற்றி பெற்றதாக வீட்டின் கேப்டன் விஷால் அறிவித்தார். ஆனால் பவித்ரா முத்துவிடம் நீங்கல் வேண்டுமென்றே விட்டுக் கொடுத்ததாக கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.