சென்னை: ’ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ப்ரோமோ ஷூட் விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இத்திரைப்படம் உலக அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் காவாலா, ஹுகும் ஆகிய பாடல்கள் மெகா ஹிட்டானது. ஜெயிலர் படத்தில் ரஜினி ஸ்டைலுடன், நெல்சனின் காமெடியும் சேர்த்து மாஸ் கமர்ஷியலாக அமைந்ததால் சினிமா ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது.
இத்திரைப்படம் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அப்போதும் இந்த வருடம் வெளியான அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் வேட்டையன் மூன்றாவது இடம் பிடித்தது. தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கூலி’ படத்தில் நடித்து வருகிறார். கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.