சென்னை: அமரன் திரைப்பட ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த படம் 'அமரன்'. இத்திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது. மறைந்த முன்னாள ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
அமரன் படத்தில் முகுந்த வரதராஜனின் காதல் வாழ்க்கை குறித்தும், ராணுவத்தில் அவர் சந்தித்த சவால்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரின் நடிப்பும் ஜிவி பிரகாஷ் குமாரின் இசையும் படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக படம் பார்த்த நாள் முதல் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.தற்போது வரை திரையரங்குகளில் அமரன் திரைப்படம் ஓடி வருகிறது. அதுமட்டுமின்றி இதுவரை உலகம் முழுவதும் ரூ.320 கோடி வரை வசூலித்து சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
தமிழ்ப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதத்தில் ஓடிடியில் வெளியாவது வாடிக்கையாக இருந்தது. ஆனால் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலை குவித்ததால் திரையரங்க உரிமையாளர்கள் படத்தின் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க தயாரிப்பு தரப்புக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.