சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ’சொர்க்கவாசல்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன், நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘சொர்க்கவாசல்’. இத்திரைப்படம் உண்மையை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை மத்திய சிறையில் 1990களில் நடந்த கலவர சம்பவத்தில் பல கைதிகள் சிறையை விட்டு தப்பித்ததாக கூறப்படுகிறது. இதுவரை காமெடி கலந்த குடும்ப கதைகளில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் கதையில் நடித்துள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் நடிக்க இசையமைப்பாளர் அனிருத் தான் முக்கிய காரணம் என சொர்க்கவாசல் படத்தின் ப்ரமோஷனில் ஆர்.ஜே.பாலாஜி கூறியிருந்தார்.
முன்னதாக இப்படத்தில் வேறு ஒரு நட்சத்திர நடிகர் கதாநாயகனாக நடிக்க இருந்ததாகவும், பின்னர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி சரியாக இருப்பார் என அனிருத் கூறியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் வரும் 29ஆம் தேதி ’சொர்க்கவாசல்’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று (நவ.23) இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.