சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் கேம் சேஞ்சர் (game changer) என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது முதல், படக்குழு பல்வேறு தடைகளைச் சந்தித்து வருகிறது.
நடிகர் ராம் சரண் ஹைதராபாத்தில் பங்கு பெற்ற படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதில் சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் மற்றும் கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா ஆகியோர் முக்கிய பங்காற்றி உள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் தற்போதைய படப்பிடிப்பு ஷெட்யூல் வரும் மார்ச் 2ஆம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில், நடிகர் ராம் சரண் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளதால், புச்சி பாபு இயக்கும் தனது அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். மேலும், கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளார். விரைவில் கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:அஜித்தின் பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்!