சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2. மேலும், இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 உருவாகியுள்ளது. 2019இல் தொடங்கப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு தகவல் தொழில்நுட்ப கலைஞர் உயிரிழந்தது, கரோனா லாக்டவுன் என பல இடர்ப்பாடுகள் மற்றும் தடைகளை தாண்டி வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.
மேலும் இக்கதை தொடர்ச்சியின் நீளம் கருதி இந்தியன் 2, மற்றும் 3ஆம் பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இரண்டாம் பாகம் வெளியாகி 6 மாதங்களுக்கு பிறகு 3ஆம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்தியன் 2 முதல் சிங்கிள் ‘பாரா’ கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.