எர்ணாகுளம்: மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள அரசு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. அனைத்து மொழி சினிமா துறையிலும் ஹேமா கமிட்டி பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து, மலையாள நடிகைகள் பலர் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஊனுக்கல் போலீசார் அந்த பெண்ணிடம் விரிவான அறிக்கை பெற்ற பிறகு, நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் நிவின் பாலி தவிர, ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு நடிகர் ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி தமிழில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.