சென்னை: ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள "பித்தல மாத்தி" திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக வித்யா இயக்கத்தில் ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மாணிக்க வித்யா, தயாரிப்பாளர் சரவணன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் ஆர்வி உதயகுமார், நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய காதல் சுகுமார் , உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.திருமண வரவேற்பு அன்றே அவரது படம் வெளியாவது மிகப் பெரிய ஆசிர்வாதம் என்றும் தெரிவித்தார்.
இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசும்போது, நிகழ்ச்சிக்கு வந்தால் எதோ ஒரு விஷயம் அழகாக இருக்க வேண்டும் என்றும் இங்கு ஊடக நண்பர்கள் தான் அழகாக தெரிவதாக கூறினார். உமாபதி, ஐஸ்வர்யா தம்பதிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து திருமணத்திற்கு பிறகு பெரிய மாற்றம் வரும் என நினைக்கிறேன் என்பதையும் எனக்கும் திருமணத்திற்கு பிறகு தான் முதல் படம் வெளியானது என்றும் கூறினார்.பித்தல மாத்தி படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் பார்த்ததாகவும் இயக்குனர் மாணிக்க வித்யா ரொம்ப பிரமாதமாக படைத்துள்ளதாகவும் படத்தின் தலைப்பு வித்தியாசமாகவும் அழகாகவும் தமிழ் தலைப்பாகவும் உள்ளது என கூறினார். மேலும் எதார்த்த படங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்களால் மிகவும் பாராட்டப்படுகிறது என்றும் பித்தலை மாத்தி படமும் நிச்சயம் பாராட்டப்படும் படமாக இருக்கும் என்று கூறினார்.