சென்னை: இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ’கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். கோமாளி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அவரே நடித்து இயக்கிய ’லவ் டுடே’ திரைப்படம் கோலிவுட்டே திரும்பி பார்க்கும் அளவு மிகப் பெரும் வெற்றி பெற்றது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான ’லவ் டுடே’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதனை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ’டிராகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அஷ்வத் மாரிமுத்து அறிமுகமானார். 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ’டிராகன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை லவ் டுடே, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ’கோட்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார்.