சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (ஜனவரி 14) தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவர்களையும் உழவுத் தொழிலையும் கொண்டாடி பெருமைபடுத்தும் நாளாக விளங்கும் பொங்கல் திருவிழா, தமிழர்களின் முக்கியமான பண்பாட்டு அடையாளமாக இருக்கிறது.
உழவிற்கும் நாம் வாழ்வதற்கும் உதவியாக இருக்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக விளங்கும் பொங்கல் திருவிழா. எந்தவித வேறுபாடுகளுமின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு தங்களது பொங்கல் வாழ்த்துகளை சமூக ஊடகங்களின் வழியே தெரிவித்து வருகின்றனர்.
தமிழின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், ”உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துகள்” என பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். மற்றோரு முன்னணி நடிகரான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ”வரப்பை உயர்த்தினால் நீர் உயர்ந்து, நெல் செழித்து, வாழ்வு வளம் பெறும், நாடு நலம் பெறும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம், சிந்தனையின் தரத்தை உயர்த்துவோம். பொங்கல் திருநாளில் அன்பு பொங்கட்டும்” என தனது பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.