சென்னை: "ஏம்பா இவ்ளோ தாடி வெச்சிருக்க, அசிங்கமா இருக்கு, ஷேவ் பண்ணு" என வீட்டில் தாடி வளர்க்கும் ஒவ்வொரு ஆண்களும் தினசரி திட்டு வாங்குவதுண்டு. ஆனால் தாடி வைப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. தாடி வளர்த்தல் அழகு, அசுத்தம், பலம் என பல பொருட்களுடன் தொடர்புடையது.
அதேபோல் இஸ்லாமியர்களுக்கு மத கோட்பாடுகளின் படி தாடி வைப்பது கட்டாயமாக பார்க்கப்படுகிறது. மேலும் பணக்காரர்கள் தங்களிடம் உள்ள வளங்களை குறிக்கவும், ஏழைகள் தங்கள் ஏழ்மையை குறிக்கவும் தாடி வைப்பதுண்டு. இந்நிலையில் உலக தாடி தினம் இன்று (செப் 7) கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் சனியன்று தாடி தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொறு எமோஷன்களை உள்ளடக்கியுள்ள தாடிகளில் பல வகை உள்ளது. காதல் தோல்வி, வறுமை ஆகியவற்றை குறிக்கும் விதமாகவும் ஆண்கள் தாடி வைப்பதுண்டு. சினிமாக்களில் அன்று முதல் இன்று வரை நடிகர்கள் ரசிகர்களை கவர விதவிதமான ஸ்டைலில் தாடி வைத்து வருகின்றனர். அதுவும் தாடி ஒரு சிலருக்கு அடையாளமாக மாறி நகைசுவை நடிகர் பாலாஜி பெயர் தாடி பாலாஜியாக மாறியது. அந்த வகையில் சினிமாவில் தாடி மூலம் ட்ரெண்டாகி ரசிகர்களை கவர்ந்த நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.
‘கமல்ஹாசன்’: வேலையில்லா திண்டாட்டத்தால் சமூகத்தின் மீது கோபம் கொண்ட ஆக்ரோஷமான இளைஞராக கமல்ஹாசன் நடித்த படம் சத்யா. இந்த படத்தில் கமல்ஹாசனின் தாடி மற்றும் அவர் கையில் அணிந்திருந்த காப்பு ஆகியவை ரிலீசான காலத்தில் மிகவும் பிரபலமானது. அப்போது இளைஞர்கள் மத்தியில் தாடியும் காப்பும் ட்ரெண்ட் செட்டராக இருந்தது. கமல்ஹாசன் ரசிகரான இயக்குநர் கௌதம் மேனன் தான் காப்பு அணிந்ததற்கு காரணம் சத்யா திரைப்படம் என்று ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அந்தளவிற்கு சத்யா திரைப்படத்தில் கமல்ஹாசன் தோற்றம் தாக்கத்தை ஏற்படுத்தியது
ரஜினிகாந்த்: தாடி, ஸ்டைல் என்று வரும் போது ரஜினிகாந்தை குறிப்பிடாமல் இருக்க முடியாது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் வெள்ளை தாடி, ஸ்டைல் கண்ணாடியுடன் படு கிளாஸான தோற்றத்தில் இருப்பார் ரஜினிகாந்த். இயற்கையாகவே ரஜினிகாந்த் ஸ்டைலான மனிதர் என அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் ரஜினி வைத்த தாடி தற்போது மட்டுமல்ல, பாட்ஷா படத்திலேயே பிரபலமானது. பாட்ஷா பட ஹேர் ஸ்டைல், தாடி, தோற்றம் ஆகியவை இன்று வரை ரஜினி திரை வாழ்வில் சிறப்பான தோற்றத்தில் ஒன்றாக கருதப்படுகிறது.