சென்னை: கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான All We Imagine as Light திரைப்படம், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்னதாகவே 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. ஆண்டுதோறும் பிரான்ஸில் நடைபெறும் புகழ்பெற்ற கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை இப்படம் பெற்றது. கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் மற்றும் அஜீஸ் நெடுமங்காட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை பாயல் கபாடியா இயக்கியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா 2024இல் வெளியான திரைப்படங்களில் தனக்கு பிடித்தவற்றை பட்டியலிட்டுள்ளார். அதில் இடம்பெற்ற ஒரே இந்திய திரைப்படம் All We Imagine as Light மட்டுமே. இத்திரைப்படம் தற்போது ஜனவரி 3ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
பெருநகரங்களும் பெண்களும்
மும்பை போன்ற பெருநகரங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக வாழக்கூடிய பெண்களின் கதையைச் சொல்கிறது All We Imagine as Light. பிரபா, அனு, பார்வதி என மூன்று வெவ்வேறு வயதுகளில் கணவனைப் பிரிந்து வாழும் பெண்களில் பிரபாவும், தினமும் காதலனைச் சந்திக்கும் அனுவும், மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்கிறார்கள். வயதிலிருந்து எல்லாவற்றிலும் நேரெதிரான குணாதிசயங்கள் கொண்டவர்கள்.
ஆனால் பெருநகரத்தின் நெரிசலுக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழப் பழகிக் கொள்கிறார்கள். தனது வீட்டிற்காக போராடும் பார்வதி அம்மாவும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். தனித்தனி கதைகளாக போராட்டங்களாக இருப்பினும் பெருநகரம் இவர்களை இயல்பாக ஒன்றிணைக்கிறது. மூவரும் இணைந்து பார்வதி அம்மாவின் சொந்த ஊரான ரத்னபுரி செல்கிறார்கள். பின்பு ஏன், எதற்கு? என்ன நடந்தது? என்பதை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
மிக வறண்ட நிலத்தில் முதன்முறையாக விழக்கூடிய மழைத்துளியானது அங்குள்ளவர்களுக்கு ஒளியாகத்தான் தெரியும். அப்படித்தான் மும்பை போன்ற பெருநகரங்கள் புலம்பெயர்ந்து வரக்கூடிய அனைத்து தொழிலாளார்களுக்குமே பெரும் ஒளியாகவே தெரிந்திருக்கும். படத்தின் ஆரம்பமான மும்பையின் விடியாத அதிகாலையின் காட்சிகளுடனே இதனை நமக்கு உணர்த்துகிறார் இயக்குனர் பாயல் கபாடியா.
இதையும் படிங்க: லுங்கியுடன் வந்து ’சங்கீத கலாநிதி’ விருது பெற்றார் டி.எம்.கிருஷ்ணா!
பெருநகரங்களில் குடும்பத்திற்காக உழைக்கும் ஆண்களின் கதைகளை மட்டுமே பார்த்து வந்த பொதுச்சமூகத்திற்கு பெருநகரப் பெண்களின் கதையைத் சொல்கிறார் பாயல். தனித்துவிடப்படும் ஆண்களைப் போல அல்லாமல் இவர்களது வாழ்க்கை அகமும் புறமும் எதோ ஒருவகையில் போராட்டமாகவே நகர்கிறது. மூவரும் எதோ ஒரு வகையில் சமூகத்தின் நெருக்கடிகளை உடைத்தாலும் மற்றொரு வகையில் அதனை மீற முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். அவ்வாறு தான் நமது சமூக அமைப்பு இருக்கிறது என்பதை திரைக்கதையின் வழியே உணர்த்துகிறார் இயக்குநர்.
கதையில் பெண்கள் அனைவரும் பெண்கள் என்பதற்காக புனிதமானவர்களாக இல்லை. அனைவரும் தவறுகளை செய்கிறார்கள். அதன் வழியேதான் வாழக்கை பற்றிய புரிதலை அடைகிறார்கள். மூன்று முக்கிய கதாபாத்திரங்களும் வெவ்வேறு வயதுடையவர்கள். அவர்கள் தங்களது பொறாமை, ஒவ்வாமை, முன்தீர்மானம் போன்றவற்றைத் தாண்டி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பதும் அவர்களை புரிந்துகொள்வதும் தான் திரைக்கதையின் அழகியல். மூவரும் இணைந்து மேற்கொள்ளும் பயணம் அவர்களுக்குள் இருக்கும் அனைத்து சிடுக்குகளையும் இயல்பாக உடைத்துப் போடுகிறது.
அனைத்து நதிகளும் வெவ்வேறு பாதைகளைத் தாண்டி கடலை வந்தடைவதைப் போல, அவர்களும் அழகான புரிதலை அந்த கடற்கரையில் அடைகிறார்கள். அந்த காட்சி சட்டகம் கவிதையாய் இருப்பதை மறுக்க முடியாது. அதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். மேலும் ஆண்கள் மட்டுமே நிறைந்து கிடக்கும் பெரிய திரையில் படம் முழுக்க பெண்கள் மட்டுமே இருப்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது.
படம் நெடுக மழை பெய்து கொண்டே இருக்கிறது, வறண்ட நிலத்தின் ஒளியைப் போல. ஆனால் இங்கே பெருநகர வெளிச்சங்களை மழை மங்கலாக்கிக் கொண்டே இருக்கிறது. மழையினூடே மும்பையைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற யோசனை மிகச்சிறப்பாக இருந்தது. மும்பையின் குறுகலான வீதிகளில் உண்மையான மழைக்கு நடுவே படமாக்கியிருக்கிறார்கள்.
பகல், இரவு என எல்லாப் பொழுதுகளில் இருக்கிற வெளிச்ச ஆதாரங்களை மட்டுமே பயன்டுத்தி ஒளிப்பதிவு செய்திருப்பது அத்தனை எளிதான வேலை அல்ல. ஆனால் அதை திறம்பட செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ். கிளமெண்டின் படத்தொகுப்பும் டோப்ஷியின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம். படத்தின் முக்கிய நடிகர்களான சாயா கதம், கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, அஸிஸ் நெடுமங்காடு பற்றி தனியே சொல்லத் தேவையில்லை.
30 ஆண்டுகளுக்குப் பின்பு கான் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் போட்டியிட்ட ஒரே இந்திய திரைப்படம் All We Imagine as Light. அது மட்டுமில்லாமல் கிரண்ட் பிரிக்ஸ் விருதினையும் பெற்றுள்ளது. தற்போது டிஸ்னி ஹாட்ஸாடாரில் வெளியாகியுள்ளது.