சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. ரெட் ஜெயன்ட் மூவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவும் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பும் செய்துள்ளனர். ’காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜனவரி 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் ‘என்னை இழுக்குதடி’ பாடல் இளைஞர்களிடையே சமூக ஊடகங்களில் வைரல் ஹிட்டானது. மேலும் இன்னொரு பாடலான பிரேக் அப் பாடலை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இவ்வாறாக மொத்த ஆல்பமுமே ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவனிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்நிலையில் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் தனியார் பக்கம் பதிவிட்டுள்ள விமர்சனத்தில் ”தற்போதிருக்கும் தலைமுறையின் அழகான நவீன காதல் கதையாக இத்திரைப்படம் உள்ளது. நடிகர்கள் ரவி மோகன், நித்யா மேனன் இருவரும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரவி மோகனைவிட நித்யா மேனனுக்கு அதிகமான திரை நேரமும் முக்கியத்துவமும் இருக்கிறது”, என கூறியுள்ளனர்.
அதேபோல் 'காதலிக்க நேரமில்லை' எல்லோரும் பார்க்கும்படியான படமாக இருக்குமா என்பது சந்தேகம்தான் என்றும், புரிந்துகொள்வதற்கு முதிர்ச்சி தேவையான விஷயங்களான தனி பெற்றோர்களின் வளர்ப்பு (Single Parenting), பால் புதுமையினரின் காதல் (LGBTQ), ஓரின ஈர்ப்பாளர்களின் வாழ்க்கை, செயற்கை கருத்தரிப்பு போன்றவற்றை கதைக்களமாக கொண்டிருக்கிறது இப்படம். இளையதலைமுறையினருக்கான படமாக இருக்கும் என மற்றொரு விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.