தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ்.. ஓடிடி ரிலீஸ் எப்போது? - மஞ்சுமெல் பாய்ஸ்

Manjummel Boys 100 Cr Club: சமீபத்தில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் மலையாளப் படமான மஞ்சுமெல் பாய்ஸ் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 9:27 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ்தான் பேசுபொருளாக உள்ளது. மலையாள படமாக இருந்தாலும் கூட்டம் கூட்டமாக தமிழ் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் வெளியான தமிழ்ப் படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில், மலையாளப் படம் ஒன்று சென்னை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் சிக்கிக் கொண்ட நண்பரை மீட்கப் போராடும் நண்பர்களின் கதைதான் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் மஞ்சுமெல் பகுதியிலிருந்து கொடைக்கானல் பகுதிக்குச் சுற்றுலா சென்ற நண்பர்கள் குழு, அங்குள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பார்த்துவிட்டு குணா குகைக்குச் சென்றுள்ளனர்.‌

அப்போது இவர்களின் நண்பர்களின் ஒருவரான சுபாஷ் என்பவர், ஆழமான குகைக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்குச் சிக்கியவர்கள் யாரும் உயிருடன் மீண்டதில்லை. ஆனால், சுபாஷை அவரது நண்பர்கள் எப்படி உயிருடன் காப்பாற்றினார்கள் என்பதே இப்படத்தின் கதை. கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் மஞ்சுமெல் பாய்ஸ்.

இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியில் இடம் பெறும் குணா படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை ஏ.சிதம்பரம் இயக்கியுள்ளார். கடந்த பிப். 22ஆம் தேதி மலையாள மொழியில் வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மெகா ஹிட்டடித்துள்ளது.

சுமார் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், இதுவரை ரூ.100 கோடி வசூலித்து சாதித்துள்ளது. இதன்‌ மூலம் ரூ.100 கோடி வசூல் செய்த மலையாளப் படங்கள் பட்டியலில் மஞ்சுமெல் பாய்ஸ் படமும் இணைந்துள்ளது.

இதுவரையில் புலி முருகன், த்ரிஷ்யம், லூசிபர், 2018 ஆகிய படங்கள்தான் ரூ‌.100 கோடிக்கும் மேல் வசூலித்து உள்ளது. அதுமட்டுமின்றி, விரைவில் 100 கோடி வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் மஞ்சுமெல் பாய்ஸ் தன்வசப்படுத்தி உள்ளது.

இப்படத்தின் தாக்கத்தால் கொடைக்கானலில் உள்ள குணா குகைக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பிரம்மயுகம், பிரேமலு ஆகிய படங்களும் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ராமாயண் படப்பிடிப்பு தொடக்கம்? ஷாக் அப்டேட் வெளியிட்ட படக்குழு! இவங்கெல்லாம் வேற படத்துல இருக்காங்களா?

ABOUT THE AUTHOR

...view details